மனநலம் குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தீபிகா படுகோன், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட மனநலச் சவால்கள் குறித்துப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் தன்னைத் தானே பலமாக அறைந்து கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, பத்து லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
What must be going through his life?🥲 pic.twitter.com/NIppCnbyzo
— Sunil Rao (@memer_mitron) November 4, 2025
இந்த வைரல் வீடியோ, குறிப்பாக இந்தியாவில் ஆண்களுக்கான மனநல விழிப்புணர்வு குறைபாடு குறித்துப் பலரின் கவனத்தை ஈர்த்து, கவலையைத் தூண்டியுள்ளது. @memer_mitro என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் இருந்த அந்த நபர், போக்குவரத்து நின்றிருந்தபோது தனது தலைக்கவசத்தை அகற்றிவிட்டு, ஆக்ரோஷமாகத் தன்னைத் தானே அறைந்து கொள்கிறார். பின் தலைக்கவசத்தை அணிந்துவிட்டு, மீண்டும் அகற்றி அறைவதைத் தொடர்கிறார். இதைப்பார்த்த சமூக ஊடகப் பயனர்கள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
“ஆண்களுக்கு ஆறுதல் அளிக்கும் நண்பர்கள் தேவை. அழுவதற்கு வீட்டில் குழந்தைகள் முன்னால் முடியாது, அலுவலகத்தில் முடியாது, தலைக்கவசத்திற்குள் பயணிக்கும்போது ஒரு மணிநேரம் தான் பாதுகாப்பான இடம்” என்று ஒரு பயனர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த விவாதங்களைத் தொடங்கியுள்ள இந்தச் சம்பவம், மனநல உதவிக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது.
