நாட்டையே உலுக்கும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் தீட்டப்பட்ட இரு வேறு பெரிய சதித் திட்டங்கள் சமீபத்தில் முறியடிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் நடத்திய அதிரடிச் சோதனையில், ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 300 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ்., ஏகே-47 துப்பாக்கி மற்றும் பெருமளவிலான தோட்டாக்கள் ஆகியவற்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், நாட்டின் பல்வேறு இடங்களில் ரசாயன விஷம் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேரை குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படை கைது செய்துள்ளது.
ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட முஜாஹில் ஷகீல் என்ற காஷ்மீரி மருத்துவர் கொடுத்த தகவலின்பேரில், வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 5 லிட்டர் ரசாயன திரவம் மற்றும் 14 கனமான பைகளில் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ். என மொத்தம் 48 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஸ்ரீநகரில் சுவரொட்டி ஒட்டிய டாக்டர் ஆதில் என்ற மற்றொரு மருத்துவருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், குஜராத்தில் பிடிபட்ட மருத்துவர் உட்பட மூன்று நபர்களிடமிருந்து ‘ரிசின்’ என்ற கொடிய உயிரியல் விஷம் தயாரிக்கப் பயன்படும் 4 லிட்டர் ஆமணக்கு எண்ணெய் மற்றும் மூன்று வெளிநாட்டுப் பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களும், தேசத்தின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை வெளிப்படுத்துகின்றன.
