திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சொத்துக்காகப் பெற்ற தாயையே அரசு மருத்துவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது தாய் மல்லிகாவிடம் சொத்துப் பிரிவினை தொடர்பாகத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாகத் தனது தாயை அவர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மல்லிகா தரப்பில் இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆனந்தின் சகோதரர் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர் ஆனந்தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் வேகமாகப் பரவின.

இதனையடுத்துப் பொதுமக்களின் கண்டனங்கள் அதிகரித்த நிலையில் வந்தவாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவர் ஆனந்தனை அதிரடியாகக் கைது செய்தனர். தாயை மதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு அரசு அதிகாரியே இத்தகைய செயலில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.