மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 31 வயதான இளைஞர் ஒருவர், தான் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சில நொடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காணொளியில் பதிவான இந்தக் காட்சியில், ஷிவ்நாராயண் மால்வி என்ற அந்த இளைஞர், ஒரு எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் நாற்காலியில் அமர்ந்தபடி, வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டும், கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டும் இருக்கிறார். அப்போது, அவர் திடீரென சோர்வடைந்த நிலையில், நாற்காலியில் இருந்து சரிந்து விழுகிறார்.
உடனடியாக அவரது சக ஊழியர்கள் அவரைத் தூக்கி, அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தூரின் ஷிவ்நகர், முசகேடி பகுதியைச் சேர்ந்த ஷிவ்நாராயண் மால்வி, கடந்த 4-5 ஆண்டுகளாக பஜாஜ் ஃபைனான்ஸில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் திருமணமாகி, இரண்டு சிறிய குழந்தைகளுக்குத் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, அவருக்கு இதுவே முதல் மாரடைப்புத் தாக்குதல் என்றும், அனைத்தும் மூன்று நிமிடங்களுக்குள்ளேயே நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது மருமகன் சாம்ராட் மால்வி, “அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரெனத் தாக்குதல் ஏற்பட்டு விழுந்துவிட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இளம் தலைமுறையினர் அனைவரும் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
31-yo Finance Company Employee Suffers Silent Attack While Dealing With Customers At Electronic Showroom In Indore#MadhyaPradesh #MPNews #FreePressMP pic.twitter.com/l5poXjTFT3
— Free Press Madhya Pradesh (@FreePressMP) December 10, 2025
இந்தச் சம்பவம் குறித்து பாவர்குவான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமீப காலமாக, இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
