கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர் சுகன்யா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு குழந்தைகள் நல அலுவலர் முகுந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருடன் ஒரு திருமண மண்டபத்திற்கு சென்று இருதரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தை திருமணம் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பூணூல் தான் மாற்றுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் அச்சடிக்கப்பட்டு கொடுத்த அழைப்பிதழை காண்பித்து கேட்டனர். அது போலியானது என அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பாக திருமணம் நடத்தக்கூடாது என கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.