பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்து செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் என பணிகள் இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் சார்பாகவும் கோரிக்கை கொடுக்கப்பட்டது.
இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று காலாண்டு விடுமுறை நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னும் பள்ளி தொடங்க 1 நாள் மட்டுமே இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே காலாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவர்களுக்கு கொடுத்து, இரண்டாம் பருவத்திற்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாட புத்தகங்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து முடிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுருத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இரண்டாம் பருவத்திற்கான கற்றல், கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத்திருவிழா தொடர்பான போட்டிகளுக்கான நடைமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.