ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பை 37 ஆண்டுகளில் முதல்முறையாகப் புறக்கணித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 1989-ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் தவறாமல் கலந்துகொண்ட இந்த முக்கிய நிகழ்வில், இம்முறை அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியின் போது விமானப்படையினர் காட்டிய விசுவாசத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அரசு அதிகாரப்பூர்வக் காரணங்கள் எதையும் அறிவிக்காத நிலையில், அமெரிக்காவுடனான போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களே இதற்குக் காரணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள சூழலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமேனி பதுங்கு குழியில் இருக்கலாம் என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், 86 வயதாகும் அவரது உடல்நிலை நலிவடைந்துள்ளதால் அவர் கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கமேனியின் இந்த விலகல் ஈரானின் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.