வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த வகையில் கடந்த 30ம் தேதி நிலா பெண்ணை தேர்வு செய்வதற்கு வழக்கமாக நடைபெறும் சடங்குகளை தொடங்கினர். இந்த வினோத வழிபாட்டின் 8வது நாள் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம் ஆகும்.
அதனடிப்படையில் 8-வது நாள் வழிபாட்டில் தூங்காமல் இருந்த அக்கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மேகலா தம்பதியின் மகள் சர்வ அதிஷ்டா(10) என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நிலா பெண்ணாக தேர்வு செய்த சர்வ அதிஷ்டாவை கிராம பெண்கள் ஊர் எல்லையிலுள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆவாரம் பூக்களை மாலையாக கட்டி அச்சிறுமிக்கு அணிவித்தனர். அதன்பின் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலைமீது வைத்தனர்.
அந்த கூடையை சுமந்தவாறு சிறுமி ஊர்வலமாக கோட்டூருக்கு அழைத்து வரப்பட்டார். ஊர்மக்கள் சார்பாக தாரை தப்பட்டை முழங்க சிறுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறுமியை ஊர் எல்லையிலுள்ள கோவில் கிணற்றுக்கு அழைத்து சென்றனர். பின் கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றிலுள்ள தண்ணீரில் போட்டுவிட்டு, அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரிவைத்து நிலா பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன் கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு 7 நாட்கள் அணியாமல் எறிந்துகொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது. 100 வருடங்களுக்கு மேல் இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.