உத்தரப் பிரதேச மாநிலம், காண்ப்பூரில் (Kanpur) உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில், சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது மூத்த குடிமகளுக்கு (Sudha Dubey), அங்கு CPR (Cardiopulmonary Resuscitation) அளிக்கப்பட்டபோது அலட்சியம் காரணமாக அவரது விலா எலும்புகள் (Ribs) முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்பின் மீது ஏறி CPR அளித்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கன்னோஜைச் (Kannauj) சேர்ந்த சுதா துபேவுக்குச் சுவாசம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர் கல்யாண்பூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் CPR அளிக்கப்பட்டது.

ஆனால், ஊழியரின் அலட்சியமான செயலால் அவரது விலா எலும்புகள் உடைந்ததால், நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து, நர்சிங் ஹோம் நிர்வாகம் அவரை இருதயவியல் நிறுவனத்திற்கு (Cardiology Institute) உடனடியாக மாற்றியது.

ஆனால், அங்கே மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், நர்சிங் ஹோம் ஊழியர்கள் சிகிச்சை தொடங்கும் முன்னரே கையெழுத்து வாங்கியதாகவும், 21 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் மகன் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்துச் சுகாதாரத் துறை மற்றும் நிர்வாகத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.