கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முண்டூர் கிராமத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 75 வயது மூதாட்டி தங்கமணி, தன்னுடைய சொந்த மகளாலும், அந்த மகளின் ஆண் நண்பராலும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் தங்கமணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில், முகத்தில் இருந்த காயங்களைப் பார்த்த காவல்துறையினர், அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனால், மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்தபோது, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது, அக்கம் பக்கத்தினர், “தங்கமணி எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியை அணிந்திருப்பார். ஆனால், இப்போது அது காணாமல் போயுள்ளது” என்ற முக்கியத் துப்பை அளித்தனர். காணாமல் போன அந்தச் சங்கிலியே இந்த வழக்கின் முடிச்சு அவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது.
காணாமல் போன தங்கச் சங்கிலியை மையமாக வைத்து, கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த தங்கமணியின் மகள் சந்தியா (45) என்பவரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், சந்தியாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நிதின் (29) என்ற இளைஞருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. காவல்துறையின் தொடர் கேள்விகளுக்குப் பிறகு, சந்தியா உண்மையை ஒப்புக்கொண்டார்.
தன் ஆண் நண்பரான நிதினுக்குப் பண உதவி செய்வதற்காக, தாயின் தங்கச் சங்கிலியைக் கேட்டதாகவும், அதற்குத் தங்கமணி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியதாகவும் சந்தியா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் காணாமல் போன சங்கிலிதான் இந்த கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டுபிடித்து, மகளையே கொலையாளியாகக் கண்டறிந்த காவல்துறையின் செயல் பாராட்டிற்குரியது. இந்தக் கொலையில் ஈடுபட்ட சந்தியா மற்றும் நிதின் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
