ஜார்க்கண்ட் மாநிலம், பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியில், தனது மனைவி மதுபோதையில் வீடு திரும்பியதால் கோபமடைந்த கணவன், வாக்குவாதத்தின் முடிவில் அவரைத் தாக்கித் தரையில் தூக்கிப் போட்டுக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. உபேந்திர பர்ஹியா (25) மற்றும் அவரது மனைவி ஷில்பி தேவி (22) ஆகியோருக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
சம்பவத்தன்று, கணவன் உபேந்திரா ஏற்கனவே மதுபோதையில் இருந்த நிலையில், வெளியில் சென்றிருந்த மனைவி ஷில்பி தேவியும் தள்ளாடியபடி மதுபோதையில் (Intoxication) வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உபேந்திரா, மனைவி மீது கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை முற்றியதில், உபேந்திரா தனது மனைவி ஷில்பியைத் தாக்கி, பின்னர் அவரைத் தூக்கி வேகமாகத் தரையில் போட்டுள்ளார்.
இதில் தலையில் காயமடைந்த ஷில்பி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உபேந்திராவை கைது செய்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
