கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இந்துக்களை தவிர்த்து மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதியில்லை. இதேபோல் கேரளாவின் கொச்சி பகுதியிலுள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலிலும் மாற்று மதத்தினர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதன்பின் கேரளா முழுவதும் இருந்து பெரும்பாலான பக்தர்கள் இந்த கோயிலுக்கு சென்றனர்.

இந்நிலையில் நடிகை அமலாபாலும் உறவினர்கள் உடன் இந்த கோவிலுக்கு சென்றார். ஆனால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். காரணம் அவர் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக மனம்வருந்திய அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அக்கோயில் நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

அதாவது, இந்த கோவிலில் இதுவரை கடைபிடித்து வந்த நடைமுறைப்படியே அவர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்த கோயிலுக்கு பெரும்பாலோனர் வருகின்றனர். சொல்லப்போனால் மாற்று மதத்தவரும் வருகின்றனர். அவர்களை பற்றி வெளியே எதுவும் தெரியாததால் பிரச்சனையில்லை. ஆனால் நடிகை அமலா பாலை அனைவருக்கும் தெரியும். ஆகவே அவரை கோயிலுக்குள் அனுமதித்தால் கோவில் நடைமுறையை மீறியதாக சர்ச்சை ஏற்படும். இதனால் தான் அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை” என்று கூறினர்.