இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில்  KH -234 படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் உருவாகும் KH 234 திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மணிரத்தினம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் 7 மாநிலங்களை சேர்ந்த நடிகர்கள் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கமல் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹேராம் என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் கமல் மற்றும் ஷாருக்கான் படத்தில் இணைய இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.