இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பாகிஸ்தான் முன்னாள் ஆக்கி வீராங்கனை ஷாகித ரஸா உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் அணியில் கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதற்கு பின்அவர் 2019 ஆம் ஆண்டிலிருந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றார். இதனை அடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வேலை தொலைத்துள்ளார். அதோடு விவாகரத்து, மகனுக்கு உடல் நல குறைவு ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நிம்மதியில்லாமல் இருந்துள்ளார்.

மேலும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூன்று வயது மகனுக்கு உயிர் காக்கும் சிகிச்சையைக் கூட அளிக்க முடியாமல் அவர் கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் மகனை தன் குடும்பத்தினரிடம் விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறி துருக்கிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து படகு விபத்து நடந்த அன்று கூட அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார். ஹாகிதா ரஸாவின் உடலை புகைப்படங்கள் மற்றும் கழுத்தில் இருந்து செயின் மூலம் அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.