நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா நகர் பகுதியில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் கச்சா எண்ணெய் குழாய் தீ பற்றி எரிந்துள்ளது.
இந்த தீயினால் ஏற்பட்ட கரும்பு புகை வான் உயரத்திற்கு எழுந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.