பெல்ஜியம் நாட்டில் ஜெனிவீ  லெர்மிட் என்ற 55 வயது பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தனது ஐந்து குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி திடீரென தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் அவர் போலீசில் சரணடைந்தார். இதனை அடுத்து ஜெனிவீ லெர்மிட்க்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுவரையில் சிறையில் இருந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பொதுவாக அந்நாட்டில் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கருதப்பட்டால் கருணை கொலை முடிவை அந்த நபரே தேர்ந்தெடுக்கலாம் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் ஜெனிவீ லெர்மிட் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவருடைய வக்கீலான நிக்கோலஸ் கூறியதாவது “ஜெனிவீ லெர்மிட்க்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகு அவர் தன்னுடைய 5 கொலைகளின் 16 ஆவது நினைவு நாள் அன்று கருணை கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில் 2966 பேர் கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.