தாய்லாந்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 65 வயதுப் பெண் ஒருவர், தகனம் (Cremation) செய்வதற்காகக் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டபோது, சவப்பெட்டிக்குள் (Coffin) லேசாக அசைந்ததைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பாங்காக்கின் புறநகரில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் இருக்கும் வாத் ராத் பிரகோங் (Wat Rat Prakhong Tham) புத்தர் கோயிலில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்த அந்தப் பெண், சில நாட்களுக்கு முன்பு சுவாசம் நின்றுபோனது போல் காணப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தகனத்திற்காகச் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண், திடீரென்று மெதுவாகக் கண்களைத் திறந்தும், தனது கைகளாலும் தலையாலும் அசைந்தும் அங்கிருந்தவர்களைப் பதற வைத்துள்ளார்.

பின்னர், கோயிலின் மேலாளர் சவப்பெட்டியைத் திறந்தபோது, அவர் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மிகக் குறைந்த இரத்த சர்க்கரை (Severe Hypoglycemia) ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் மருத்துவச் செலவுகளைக் கோயில் நிர்வாகமே ஏற்கும் என்று மடாதிபதி உறுதியளித்துள்ளார்.