கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி. வீரேந்திரா, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் (ED) இன்று சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் கைது செய்யப்பட்டார்.

வீரேந்திரா, கேசினோ அமைப்பதற்காக நிலத்தை குத்தகைக்கு எடுக்க கேங்டாக் சென்றிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, நாடு முழுவதும் அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இதில், சுமார் ரூ.12 கோடி ரொக்கம், அதில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 4 விலையுயர்ந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையில், வீரேந்திராவின் 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டன. அவரது சகோதரர் கே.சி. திப்பேசாமி மற்றும் மகன் பிருத்வி என். ராஜ் ஆகியோர் துபாயில் இருந்து ஆன்லைன் கேமிங் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வீரேந்திரா கிங்567, ராஜா567, ரத்னா கேமிங் உள்ளிட்ட பல ஆன்லைன் பெட்டிங் வலைத்தளங்களை நடத்தி வந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வீரேந்திரா, கேங்டாக்கில் உள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, மேல் விசாரணைக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.