இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சிலர் மோசடியாக பணம் சேகரித்து வந்ததாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிரியாவைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த அலி மெகாத் அல்-அசார் (23) என்ற நபரை அகமதாபாத் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவர் சுற்றுலா விசாவில் சிரியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்.
இவருடன் வந்த மற்ற மூன்று பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதான நபரிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பப்பட்டு இத்தகைய மோசடி செயலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், இதன் உண்மை நோக்கத்தை கண்டறிய முயற்சி செய்வதாகவும் அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
