ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிட்வானா-குட்ஜ்மன் மாவட்டத்தில் மொமச்சர் கிராமத்தில் இருந்து புஷ்கர் நோக்கி சென்ற ஜீப் ஒன்று இன்று காலை பயணித்துக் கொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 8 பேர் பயணித்தனர்.

அப்போது லடுன்-சுஜன்கர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜீப்பின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், எதிரே வந்த ராஜஸ்தான் அரசு போக்குவரத்து கழக பேருந்து மீது ஜீப் மோதியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்தவர்களில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த மற்ற 4 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்தவர்கள் ஷாரதா தேவி, லிச்சமா, துல்சி தேவி மற்றும் ஓம்பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த ரூபா, பொஜ்ராஜ், முரளி மற்றும் மம்தா ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.