சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபெலிப் வர்கீஸ் என்ற திறமையான சைக்கிள் வீரர் செய்த அதிர்ச்சியூட்டும் ஸ்டண்ட் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பிரான்சின் உயரமான மலைப்பகுதி ஒன்றில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மிகக் குறுகிய தடுப்புச் சுவரில் அவர் தனது சைக்கிளை ஓட்டி இந்த சாகசத்தை செய்துள்ளார். தவறு செய்ய இங்கு இடமே இல்லை என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
View this post on Instagram
இந்த சாகசத்தின் மிக ஆபத்தான அம்சம் என்னவென்றால், ஃபெலிப் சைக்கிளை சமநிலைப்படுத்தி ஓட்டிய அந்த சுவருக்கு மிக அருகிலேயே ஆயிரக்கணக்கான அடி ஆழமுள்ள பாதாள குழி இருந்தது. இதில் ஒரு அங்குலம் சமநிலை மாறினாலும் மரணம் நிச்சயம் என்ற சூழலில், அவர் இந்த ஆபத்தான விளையாட்டை விளையாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானவுடன், சில நெட்டிசன்கள் அவரது அசாத்திய திறமையைப் பாராட்டினாலும், பெரும்பாலான மக்கள் இது ஒரு முட்டாள்தனமான செயல் என்று தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு வீடியோவிற்காக சொந்த உயிரையே பணையம் வைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்றும், இதைத் திரையில் பார்க்கும் போதே தங்களுக்குக் கால்கள் நடுங்குவதாகவும் சமூக வலைதளப் பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
