பொதுவாக சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் தங்களை திருத்திக்கொள்ளும் இடமாக பார்க்கப்படும் வேளையில், நைஜீரிய சிறை ஒன்றின் அவல நிலையை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மிகச்சிறிய இருண்ட சிறை அறை ஒன்றிற்குள் டஜன் கணக்கான கைதிகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டும், அமரவோ அல்லது படுக்கவோ கூட இடமில்லாமலும் தவிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. நைஜீரிய சிறைகளில் அவற்றின் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றும் இதனால் அங்கு தங்குமிடம், உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Engr Ziwari G Caleb (@bosswhytefoundation)

நைஜீரிய சிறைகளின் இந்த நெருக்கடிக்கு அங்கு நிலவும் தாமதமான சட்ட நடைமுறைகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத, விசாரணைக் கைதிகளாகவே ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர். குறிப்பாக, திறமையான வழக்கறிஞர்களை வைக்க முடியாத ஏழை மக்களே இந்த குறைபாடுள்ள அமைப்பினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) போன்ற சர்வதேச அமைப்புகள், விசாரணையை விரைவுபடுத்தி சிறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நைஜீரிய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், அவர்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்று இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.