அமெரிக்காவின் கிழக்கு ஆஸ்டின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை சாதுரியமாகச் செயல்பட்டு மீட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. டால்டன் ஷ்ரோடர் மற்றும் ஜேசன் ரைட் ஆகிய இரு அதிகாரிகளும் அவசர அழைப்பை ஏற்று சம்பத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தனர். அங்கு வில்லியம் மார்டினெஸ் ரொமேரோ என்ற 4 வயது சிறுவன் மூச்சு விட முடியாமல் தவிப்பதை கண்டனர்.
உடனே அதிகாரி ரைட் சிறுவனின் முதுகில் தட்டி முதலுதவி அளிக்க, மற்றொரு அதிகாரி ஷ்ரோடர் அவசர காலத்திற்காகத் தனது சொந்தப் பணத்தில் வாங்கி வைத்திருந்த Anti-choking device கருவியைப் பயன்படுத்தி சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்த அடைப்பை நீக்கினார். இரு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த இந்தச் செயலால் சிறுவன் மீண்டும் நல்முறையில் சுவாசிக்கத் தொடங்கினான்.
Bodycam footage show Austin police officers taking swift action to save a child that was choking on candy — and ended with a high-five and a hug. pic.twitter.com/Ili1Sngy1d
— 48 Hours (@48hours) April 16, 2024
ஆஸ்டின் போலீஸ் துறை வெளியிட்ட உடல் கேமரா (Body camera) காட்சிகளில் இந்த உருக்கமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிகாரிகளின் இந்த விரைவான மற்றும் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியுள்ள போலீஸ் துறை, அவர்களின் கூட்டுமுயற்சி ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அச்சிறுவனின் தாய் குவாடலூப் ரொமேரோ பேசுகையில், “மிக வேகமாக வந்து என் மகனைக் காப்பாற்றிய இந்த இரு அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்; என் மகன் இன்று என்னோடு இருக்க இவர்களே காரணம்” என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் மிட்டாய் தொண்டையில் சிக்கியதாகக் கருதப்பட்ட நிலையில், சிறுவன் தனது சொந்த உமிழ்நீர் காரணமாகவே மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக மருத்துவர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர். மீட்பிற்குப் பின் நடந்த சந்திப்பில் சிறுவன் வில்லியம் அதிகாரி ஷ்ரோடரை நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்.
