மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 3 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த 65 வயது முதியவருக்குச் சிறப்பு விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே 1-ஆம் தேதி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் நடந்த நிலையில், காவல்துறையின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, வெறும் 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு மிகக் குறுகிய காலத்தில் நீதி கிடைத்துள்ளதற்குப் பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்திற்குத் தங்களது வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளி ஏற்கனவே இதுபோன்ற இரண்டு குற்ற வழக்குகளில் இருந்து தப்பித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய விசாரணையின் போதும்கூட அவரிடம் எவ்வித குற்ற உணர்ச்சியோ அல்லது தான் செய்த தவறுக்காகத் திருந்துவதற்கோ ஆன எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, சமூகத்தில் இத்தகைய கொடூரக் குற்றங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கூறி இந்தத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும் முன்னதாக உறவினர்களின் வீட்டிற்கு வந்த அந்த குழந்தையை மாட்டு தொழுவத்தில் வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து சாணி குவியலில் பிணத்தை புதைத்து வைத்திருந்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் சிக்கிய நிலையில் முதலில் ஒப்புக்கொள்ளாதவர் வீடியோவை பார்த்த பிறகு தான்தான் என்று ஒப்புக்கொண்டார். மேலும் அதே நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக அவர் எந்த விதத்திலும் வருத்தம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.