திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு கடந்து சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக குறுஞ்செய்தி வந்தது.

இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது அங்கிருந்த 3 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி தருகிறோம் என கூறினர். அதற்கு விசா, விமான கட்டணம் என 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினர். இதனை நம்பி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்த பிறகும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.