தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “மிஷன் தமிழ்நாடு” என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள பா.ஜ.க, தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவரான இவர், இன்று சென்னை வந்து கமலாலயத்தில் உயர்மட்டக் குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

​இதனைத் தொடர்ந்து, நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பியூஷ் கோயல், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணியில் இணைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே 80 தொகுதிகளை இலக்காக வைத்துள்ள பா.ஜ.க, பியூஷ் கோயலின் வருகைக்குப் பிறகு கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளை மிக வேகமாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.