தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அஜிதா என்ற பெண் நிர்வாகி, ஆரம்ப காலம் முதல் ரசிகர் மன்றத்திலும் தற்போது கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றி வருபவர். தகுதியானவர்களுக்குப் பதவி வழங்காமல், புதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறி அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு விரைந்தார்.
பனையூர் அலுவலகத்தில் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சித் தலைவர் விஜய் அலுவலகத்திற்குள் காரில் நுழைந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது காரை மறித்து முற்றுகையிட்டனர். “தலைவரைச் சந்தித்து எங்கள் குமுறலைச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் முழக்கமிட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் திணறினர். ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய் எதிர்கொள்ளும் முதல் நேரடி ‘நிர்வாகிகள் எதிர்ப்பு’ இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
