மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G) குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, தற்போது மகாத்மா காந்தி பெயரையே நீக்கியுள்ள மத்திய அரசுக்கு இ.பி.எஸ் ‘முட்டு’ கொடுப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“100 நாள் வேலை என்ற சட்டம் இருந்தபோதே முறையாக நிதி வழங்காமல் மக்களை அலைக்கழித்த பா.ஜ.க அரசு, இப்போது 125 நாட்கள் வேலை தரும் என்பது வெறும் பச்சைப் பொய்” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய திட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் 40 சதவீத நிதிச்சுமையை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை எதேச்சாதிகாரமானது என்றும், இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

“மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என உங்கள் ‘ஓனருக்கு’ (டெல்லி) வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே, என்ன ஆனது? உங்களை டெல்லி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே” என இ.பி.எஸ்-ஐச் சீண்டியுள்ளார்.

வறுமையை ஒழித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை முடக்கும் பா.ஜ.க-வுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வாழ்வின் முடிவுரையைத் தானே எழுதுகிறார் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.