தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், ஒரு கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆரணி பாமக வன்னியர் சங்கச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பூக்கடை ராஜாமணி, திடீரென தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய முடிவு செய்தது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த இணைவு விழாவில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுகவின் முக்கியத் தூணுமான எ.வ. வேலு முன்னிலையில் பூக்கடை ராஜாமணி திமுகவில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். இவருடன் முன்னாள் நகரத் தலைவர் வி.எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், அமைச்சரின் முன்னிலையில் அரங்கேறிய இந்த கட்சித் தாவல், ஆரணி பகுதியில் பாமகவின் பலத்தைக் குறைப்பதோடு, திமுகவின் தேர்தல் வியூகத்திற்கு ஒரு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
