சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை காண சென்றவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தினால் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதோடு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காததால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள். ஆனால் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க நினைக்க கூடாது என்றும், மக்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும், இந்த உயிரிழப்புகளுக்கு திமுக அரசே காரணம் என்றும் பேசியுள்ளார்.

அதோடு இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது என்றும், விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வான் சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த விழாவிற்கான எல்லா முன் ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது மத்திய அரசு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சி ஆகும் என்றும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதா பங்கேற்றபோது நிகழ்ந்த இறப்புகளை எடப்பாடி பழனிச்சாமி மறக்கக்கூடாது என்றும், மதுரை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்றும் ஜெயலலிதா தூங்கியதால் 2015 ஆம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. சென்னையில் துரதிஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.