அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நடத்துகிறது.

இந்நிலையில் பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த போது, அதற்கான மருத்துவ சிகிச்சை செலவுகளை முழுவதுமாக அந்த காப்பீட்டு நிறுவனம் தர மறுத்து விட்டது. இதனால் பாரதி கடந்த 2020-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில், புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகையாக  ரூ.1,98,308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரத்தை கொடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.

மேலும் இந்த இழப்பீடு தொகையை கடந்த ஆகஸ்டு மாதத்துக்குள், தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம்  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தீர்ப்பில் கூறியபடி, இழப்பீடு தொகையை அந்நிறுவனம் வழங்கவில்லை. இதனால் கடந்த நவம்பர் மாதம் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாரதி மனு கொடுத்துள்ளார். ஆனால் விசாரணை அன்று நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில்  ஆஜராக யாரும் வரவில்லை.

இதையடுத்து  இந்த ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் விதிக்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அதிகாரம் பெற்றுள்ளன.