இன்றைய டிஜிட்டல் காலத்தில் உணவு, பூக்கள், பரிசுகள் என எதையும் வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வசதிக்காக கடுமையாக உழைப்பவர்கள் டெலிவரி பாய்கள்தான். சூரிய வெப்பத்திலும், மழையிலும், போக்குவரத்து நெரிசலிலும், இவர்களின் உழைப்புக்கான பாராட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

 

சமீபத்தில், ஒரு டெலிவரி பாய் அனுப்பிய ஒரு எளிய மெசேஜ் நெஞ்சை உருக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Ferns N Petals நிறுவனத்திற்கான டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளருக்கு அனுப்பியிருந்த மெசேஜில், “ஹலோ சர்/மேடம், நான் உங்கள் ஆர்டரை நேரத்துக்கு டெலிவரி செய்துள்ளேன். உங்களுக்கு ஒரு ஃபீட்பேக் லிங்க் வரும்.

தயவு செய்து 10 பாயிண்ட் ரேட்டிங் கொடுத்து அதன் ஸ்கிரீன்ஷாட் அனுப்புங்கள். அதனால் எனக்கு ₹10 போனஸ் கிடைக்கும். ரொம்ப உதவியாக இருக்கும். நன்றி,” என்று எழுதியிருந்தார். இந்த மெசேஜை ஒரு வாடிக்கையாளர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததுடன், அது இணையத்தில் தீயாய் பரவியது.

“இந்த செய்தி மனதை உடைத்துவிட்டது” என்று X-ல்  பகிர்ந்தவர் வருண் அகர்வால் எழுதியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உணர்ச்சி வசப்பட்டனர். “இவருக்கு ஒரு சிறிய பரிசு கொடுக்கலாம்,” “நம் சுகவாழ்வுக்காக இவர்களின் உழைப்பு எவ்வளவு கடினம்!” என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த பதிவு, டெலிவரி ஊழியர்களின் நிஜ வாழ்க்கை சிரமங்களை வெளிப்படுத்தியதுடன், “பில்லியன் ரூபாய் லாபம் பார்க்கும் நிறுவனங்கள், ஏன் தங்கள் ஊழியர்களுக்கு வாழக்கூடிய ஊதியம் தர முடியவில்லை?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.