வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 142 காளைகள் அழைத்து வரப்பட்டதில் 123 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல் அணைக்கட்டு தாலுகா பாக்கம் பாளையம், சேர்பாடி ஆகிய பகுதிகளிலும் காளை விடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த 3 இடங்களிலும் மாடுகள் முட்டியதால் 64 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில் இலக்கை அடைந்த பிறகும் நிற்காமல் ஓடிய காளை விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அந்த காளையை தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.