கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே காதல் தோல்வி காரணமாகப் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிங்கோலில் பகுதியைச் சேர்ந்த அபர்ணா ரமேஷ் என்ற பதினேழு வயது மாணவி தனது பள்ளித் தேர்வை எழுதிவிட்டுத் திரும்பியபோது இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்.
மாணவியின் காதலரான வைப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜவாத் என்பவர் தேர்வு மையத்திற்கு வெளியே மாணவியைச் சந்தித்துத் தனது காதலை முறித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சாலையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மாணவி காதலன் பரிசாக அளித்த கைபேசியை உடைத்துவிட்டு அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டிற்குச் செல்லும் வழியில் தனது காதலனைத் தொடர்பு கொண்ட மாணவி தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் பாட்டி மட்டும் இருந்த நேரத்தில் சமையலறைக்குச் சென்ற மாணவி தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வீட்டிற்கு விரைந்து வந்த ஜவாத் மாணவியைத் தூக்கிலிருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவல்லா காவல்துறையினர் ஜவாத்தை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பிறகு ஜவாத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
