உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரத்தில் நட்டம், மனைவி இல்லாத தனிமை, தனது இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டது, சகோதரன் நோயால் இறந்தது என தொடர்ச்சியான துயரங்கள் ஏற்பட்ட பின்னர், ஷரண் சிங் என்பவர் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார்.

அந்த மந்திரவாதி, “உன் பிள்ளைகள் வயதுள்ள ஒருவரை பலியாக கொடுத்தால் தான் வாழ்க்கையில் சாந்தி வரும்” என கூறியதை நம்பிய சிங், தனது அக்காவின் 17 வயது மகனைத் தேர்ந்தெடுத்தார். பள்ளிக்கு செல்வதற்காக வெளியே வந்திருந்த சிறுவனை கடந்த செவ்வாய்க்கிழமை காலை கடத்தி, வீட்டிற்குள் அழைத்து சென்று வாயை அடைத்து கொலை செய்தார். மந்திரவாதி கூறிய மந்திரங்களை ஜெபித்தபடி, சிறுவனின் தலை, கை, கால்கள், உடலின் மற்ற பகுதிகளை துண்டித்து, தனித்தனியாக பைகளில் போட்டு வைத்தார்.

பின்னர், சிறுவனின் கை மற்றும் கால்களை 10 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு காட்டில் வீசியுள்ளார். உடல் பகுதியை சிவப்பு துணியில் போர்த்தி, தனது ஸ்கூட்டரில் கொண்டு சென்று அருகில் உள்ள ஒரு கால்வாயில் வீசும் போது, பசு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் அதைக் கண்டு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் விசாரணை செய்த போலீசார், சிங்கின் ஸ்கூட்டர் எண் மூலம் அவரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிங், தான் செய்தது தவறு என ஒப்புக்கொண்டு, மந்திரவாதியின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பியதாக தெரிவித்தார். அவரது வீட்டிலிருந்து பலி கொடுத்த போது பயன்படுத்திய துணிகள், பைகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது, மந்திரவாதியை தேடும் பணியில் போலீசார் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர். ஒரு வணிக நட்டம் மற்றும் குடும்ப துயரங்கள் எப்படி ஒரு மனிதனை இந்த அளவுக்கு இரக்கமற்ற மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்ல முடிகிறது என்பதற்கான கடும் நினைவூட்டல் தான் இந்த சம்பவம் என பொதுமக்கள் வேதனையுடன் பேசிக்கொள்கின்றனர்.