மக்களவை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் (EC) கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம், பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவது கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது மற்றும் தேர்தல் செயல்பாட்டின் போது அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.