நவீன காலப் போர்களில் வீரர்களின் எண்ணிக்கையை விடத் தரவுகளின் வேகமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. ஒரு தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக இலக்குகளைத் தீர்மானிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
மனிதர்களால் வாரக்கணக்கில் செய்யப்படும் இந்த ஆய்வைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சில நிமிடங்களில் முடித்துத் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. இதன் காரணமாக மனிதர்கள் முடிவெடுக்கும் முறையிலிருந்து இயந்திரங்களே மின்னல் வேகத்தில் முடிவெடுத்துத் தாக்கும் புதிய போர்முறைக்கு அமெரிக்கா மாறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இதற்கான புதிய திட்டத்தை வெளியிட்ட அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவம் அண்மையில் நடத்திய ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் மற்றும் ஆபரேஷன் எபிக் ஃபியூரி ஆகிய இரண்டு முக்கியத் தாக்குதல்களில் இந்தத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றியுள்ளது.
வெனிசுலா அதிபர் மதுரோவின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை ஆயிரக்கணக்கான மணிநேர ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்து கண்டறிந்த செயற்கை நுண்ணறிவு அவரைச் சிறைபிடிக்க உதவியது. அதேபோல் கடந்த வாரம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்ட தாக்குதலும் செயற்கை நுண்ணறிவால் வழிநடத்தப்பட்ட உலகின் முதல் போர்முறையாகக் கருதப்படுகிறது.
ராணுவத்திற்குத் தனது முழுமையான அணுகலை வழங்க மறுத்த காரணத்தால் ஆந்திரோபிக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் பென்டகன் ரத்து செய்திருந்தாலும் அதே நிறுவனத்தின் கிளாட் தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே ஈரான் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இருப்பினும் உயிரைப் பறிக்கும் முடிவுகளை எடுக்கும்போது மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களை முழுமையாக நம்புவது பேராபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தவறான ஓர் இடத்தைக் குறிவைத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதற்கு உதாரணமாகத் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி தவறுதலாகத் தாக்கப்பட்டதில் 160 சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இலக்கைக் கண்டுபிடித்துத் தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமான கொலைச் சங்கிலி என்பதை இந்தத் தொழில்நுட்பம் நிமிடங்களாகக் குறைத்திருந்தாலும் இது போன்ற தவறுகள் மனிதாபிமானமற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இனிவரும் காலங்களில் போர்கள் வெறும் ஆயுதங்களால் மட்டுமின்றி கணினி சூத்திரங்களால் தான் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
