இந்தியாவில் தற்போது திருமண சீசன் களைகட்டியுள்ள நிலையில், சோசியல் மீடியாவில் மணமகன் மற்றும் மணமகள் குறித்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும்  உருக வைத்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், திருமண மேடையில் மாலை மாற்றும் (ஜெயமாலா) வைபவத்திற்காக புதுமணத் தம்பதியினர் ஜோடியாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்தவர்கள் அனைவரும் அந்த ஜோடியை வாழ்த்திப் பாராட்டிய வேளையில், கேமராமேன் திடீரென மணமகனின் கால்களை நோக்கி கேமராவைத் திருப்பியுள்ளார்; பொதுவாகத் திருமணத்தன்று மணமகன்கள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு பந்தாவாக வலம் வரும் நிலையில், இந்த மணமகன் காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து திருமண மேடையில் அமர்ந்திருந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்களின் கண்கள் குளமாகியுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Shravanjee Kushwaha (@shravanjeejee)

அந்த மணமகன் தனது திருமணத்திற்கு ஒரு ஜோடி நல்ல காலணிகள் கூட வாங்க முடியாத அளவுக்குக் கடுமையான வறுமையில் வாடினாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது முகத்தில் ஒரு அழகான புன்னகையோடு, தன் காதல் மனைவியுடன் அந்தத் திருமணப் பொழுதைக் கொண்டாடிய விதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “வறுமை எவ்வளவு கொடூரமானது, ஆனாலும் மணமகனின் அந்தப் புன்னகையும் தைரியமும் பாராட்டுக்குரியது” என்றும், “உண்மையான அன்பு பணத்தை நம்பி இருப்பதில்லை என்பதற்கு இந்தத் தம்பதியினரே சாட்சி” என்றும் கமெண்ட் செய்து வருவதுடன், அந்த ஏழை மாப்பிள்ளைக்கு யாராவது நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.