நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரப் பிரிவுத் தலைவரும், தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகருமான பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஒடுக்குவதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார். தணிக்கை வாரியத்தின் மூலம் வேண்டுமென்றே முட்டுக்கட்டை போட்டு படத்தின் வெளியீடு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது பதிவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் மற்றும் அரசியல் தரப்பிலிருந்து இடையூறுகள் ஏற்பட்டபோது, ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
“மிஸ்டர் மோடி, சினிமா என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு, மெர்சல் படத்தில் தலையிடுவதன் மூலம் தமிழ் அடையாளத்தை முடக்க முயற்சிக்காதீர்கள்” என அன்று ராகுல் காந்தி பதிவிட்டதைச் சுட்டிக்காட்டி, தற்போதும் அதே போன்றதொரு அடக்குமுறை நிலவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
சென்சார் வாரியத்தின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
