நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழகச் சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காரணங்களுக்காகவும் தனது கடைசிப் படம் என்பதாலும் இந்த விவகாரத்தை விஜய் தேவையில்லாமல் பெரிதாக்கி ஒருவிதமான ‘பில்டப்’ கொடுத்து வருவதாகச் சாடினார்.
மேலும் தணிக்கைக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படுவதை விடுத்து, ரசிகர்களைத் தொடர்ச்சியான கொதிநிலையில் வைத்திருக்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், கூட்ட நெரிசல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், சினிமா நட்சத்திரங்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்யும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் திட்டமிட்டபடி படம் வெளியாகாத நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு தற்போது பரிசீலித்து வருகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், இந்தப் படம் அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்று கூறப்படுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சபாநாயகரின் இந்த விமர்சனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
