அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி நிலவி வந்த பல்வேறு அரசியல் யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை என்றும் ஆணித்தனமாகக் கூறினார். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மட்டுமன்றி, கூட்டணியில் ஓபிஎஸ்-ஐ இணைக்க விரும்புவதாகக் கருதப்படும் பாஜக தலைமைக்கும் மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்ட செய்தியாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

மேலும், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக ஒருபோதும் தலையிடாது என்று அமித் ஷா தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியில் சசிகலாவிற்கும் இடமில்லை என்றும், இவர்கள் இல்லாமலே அதிமுக வலிமையாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி டெல்லியிலிருந்தபடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.