சென்னையில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னை ஒன் என்ற செயலி உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலி வாயிலாக மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கான பயணச்சீட்டுகளைப் பொதுமக்கள் கியூஆர் குறியீடு முறையில் பெற்று வருகின்றனர்.

தற்போது இந்தச் செயலியைப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில் மாநகரப் பேருந்துகளுக்கான 1000 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான மாதாந்திர பயண அட்டைகளும் இதன் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் தங்கள் புகைப்படம் மற்றும் கட்டண விவரங்களைப் பதிவேற்றி ஒவ்வொரு மாதமும் இந்த அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலியில் மாதாந்திர பயண அட்டையைப் பயன்படுத்துவோர் பேருந்தில் ஏறியவுடன் தாங்கள் பயணிக்கும் பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது இதுவரை கட்டாயமாக இருந்தது. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் இவ்வாறு பேருந்து எண்களைப் பதிவிடுவது தங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பயணிகள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வந்தனர்.

பயணிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று மாதாந்திர பயண அட்டையை இனி பேருந்து நடத்துனரிடம் காண்பித்தால் மட்டுமே போதும் என்றும் பேருந்து எண்களைப் பதிவிட வேண்டிய அவசியமில்லை என்றும் போக்குவரத்து குழுமம் தற்பொழுது அறிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றத்திற்குப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.