பாகிஸ்தானில் நிலவும் கடும் வெள்ள நிலைமையை ஒளிபரப்பும் போது, ராவல்பிண்டியில் உள்ள சஹான் அணையில் ஒரு செய்தியாளர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ள நிலைமையை விவரிக்க ஒரு காலில் நின்றபடியே செய்தியாளர் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

 

அந்த வீடியோவில் அவரது மைக்கோபோனும், தலை மட்டும் தான் கடைசியாக தெரிகிறது. இந்த வீடியோ Al Arabiya English உள்ளிட்ட பன்முக ஊடகங்களில் பரவி, பத்திரிகையாளரின் துணிச்சலுக்கும், ஊடக நிறுவனங்களின் பொறுப்பின்மைக்கும் வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 26 முதல் தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் இதுவரை 159 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பஞ்சாப் மாகாணம் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.

சஹான் அணையின் உடைப்பு ராவல்பிண்டி முழுக்க வெள்ளத்தில் மூழ்க காரணமாக மீட்பு பணிகள் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்ட அறிக்கையில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துள்ள நிலையில், ஜெலம் ஆற்றில் பெருவெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீரில் மூழ்கிய பகுதிகளில் செல்லாமல், அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.