ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள யெய்சுவை சேர்ந்த 54 வயது ஹிரோடகா சைட்டோ என்ற தொழிலதிபர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிறுவனம் கடும் நிதிச் சிக்கலில் சிக்கியபோது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்து தற்கொலை செய்ய திட்டமிட்டார்.

அந்த நேரத்தில் அவருடைய 70 கிலோ எடையுள்ள செல்ல நாய், வீட்டு வாசலில் நின்று அவரை வெளியேற விடாமல் தடுக்க, அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டார். இந்த அனுபவம் அவரை பாதிக்கப்பட்ட பிற நாய்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த முடிவை எடுக்கச் செய்தது.

இந்த அனுபவத்துக்குப் பிறகு, சைட்டோ தனது நிறுவனத்தை மூடிவிட்டு, தனது சொகுசு ஃபெராரி காரை விற்று, ‘வான்ஸ்ஃப்ரீ’ எனும் ஒரு நாய் மீட்பு மையத்தை ஆரம்பித்தார். இந்த மையத்தில் கையாள்பதற்கே கடினமாக இருக்கும் 40 நாய்களும், 8 பூனைகளும் தங்கியுள்ளன.

கடிக்கும், குரைக்கும், எல்லோரிடமும் சீறும் நாய்கள் அதிகமாக இருப்பதுடன், அவற்றின் வலியை உணர்ந்து, அவற்றுக்கென அமைதியான இடத்தை உருவாக்குகிறார் சைட்டோ. “நான் ஒரு நாயால் காப்பாற்றப்பட்டேன். எனவே என் வாழ்நாளை நாய்களுக்காகவே செலவிட விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

இப்போது சைட்டோ இந்த விலங்கு தங்குமிடத்தை 2028-ஆம் ஆண்டுக்குள் 300 நாய்களுக்கு விரிவாக்கும் திட்டத்தில் உள்ளார். இதற்காக அவர் பொது நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார். அவரது கதை ஆன்லைனில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

“நாய்களும் மனிதர்களைப் போலவே உணர்வுகளுடன் வாழ்கின்றன. அவை அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவை” என்று மக்கள் பாராட்டுகின்றனர். தற்போது சைட்டோ, “என் வாழ்நாளில் இவ்வளவு நன்றாக உணர்ந்தது இதுவே முதல் முறை” என உணர்ச்சி மூர்ச்சியில் கூறுகிறார். இந்த மனிதநேயச் செயல் உலகம் முழுவதும் ஒரு மகத்தான உதாரணமாக அமைகிறது.