அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் நகரைச் சேர்ந்த மிண்டி ராஸ்முஸன் (வயது 47) என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் செப் கான் (வயது 31) என்பவரை கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் சந்தித்தார். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு, வீடியோ கால் மூலமாக உரையாடலாக மாறி, சில மாதங்களில் காதலாக வளர்ந்தது. நாட்டின் எல்லைகளும், மத வேறுபாடுகளும் தாண்டி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மிண்டி ராஸ்முஸன் 90 நாட்கள் விசா மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்திற்கு பயணித்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற சஜித், தன் ஊருக்கு அழைத்து சென்று உறவினர்களுடன் அறிமுகப்படுத்தினார். அங்கு மிண்டிக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய மரபில் திருமணம் நடைபெற்றது. மேலும், மிண்டி இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை ‘சுலேகா’ என மாற்றிக்கொண்டார்.

திருமணத்துக்குப் பின்னர், சுலேகா பாகிஸ்தானை ஒரு அமைதியான, அழகான நாடு என புகழ்ந்தார். அவரது குடும்பமும் இந்த திருமணத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். சஜித் செப் கான் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்ட நபர் என பாராட்டிய சுலேகா, இஸ்லாத்தைத் தானாகவே தேர்ந்தெடுத்ததாகவும், யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். இந்த காதல் திருமணம் தற்போது பாகிஸ்தானிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான கவனத்தை பெற்றுவருகிறது.