பிளிங்கிட் ஆர்டர் ஒரு பைக் அல்லது சைக்கிளில் வரவில்லை, மாறாக ஒரு கம்பீரமான மஹிந்திரா தார் எஸ்யூவியில் வந்து இறங்கியதைப் பார்த்து ஒரு வாடிக்கையாளர் திகைப்பில் உறைந்து போனார். இந்த அசத்தலான டெலிவரி காட்சியின் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் @divyagroovezz என்ற பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், ஆச்சரியமடைந்த வாடிக்கையாளர், “அடேங்கப்பா… தார்லயே டெலிவரி செய்ய வந்துட்டாரா?” என்று வினவுகிறார். கருப்பு நிற தார் ஜீப்பு வீட்டு வாசலில் நிற்பதையும், பார்சலை எடுத்துக்கொண்டு டெலிவரி பையன் இறங்குவதையும் வீடியோ தெளிவாகப் பதிவு செய்கிறது. இதைப் பகிர்ந்த வாடிக்கையாளர், “பிளிங்கிட் தனது டெலிவரி நபர்களுக்கு இவ்வளவு ஊதியம் தருதா? இல்ல மஹிந்திரா இவ்வளவு மலிவாக மாறியிருக்கா?” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியதும், மக்களின் நகைச்சுவை கருத்துகள் அலைமோதுகின்றன. “இவர் பிளிங்கிட் கடையின் உரிமையாளராக இருக்கலாம், தானே டெலிவரி செய்ய வந்திருப்பார்” என்று ஒருவர் கூற, “சிலர் வெறும் அனுபவத்துக்காகவோ, பொழுதுபோக்காகவோ இப்படி செய்யுறாங்க. நானே ஒரு ஸ்கார்பியோ உரிமையாளர் டெலிவரி செய்யறதைப் பார்த்திருக்கேன்” என்று மற்றொருவர் பதிலளித்தார்.
பிளிங்கிட் நிறுவனம் இதுவரை இது குறித்து எந்த உத்தியோகபூர்வ விளக்கமும் தரவில்லை. ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி, மக்கள் மத்தியில் உற்சாகமான உரையாடல்களைத் தூண்டி வருகிறது. எஸ்யூவியில் வந்த டெலிவரி பையனின் அசத்தல் வீடியோ வைரலாகி வருகிறது.
