உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாா்த்தநகா் மாவட்டம் மிஷ்ரோலியா காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், தன் கள்ளக்காதலை மறைப்பதற்காக 13 வயது மகளுக்கு எதிராகத் தாயே கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவர் வாழ்வாதாரத்துக்காக மும்பையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் 13 வயது மகளும் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி மாலை, தாய் தன் மகளைப் பொருட்கள் வாங்கி வரக் கடைக்கு அனுப்பியுள்ளார். மகள் வெளியே சென்ற இடைவெளியில், தாய் தனது கள்ளக்காதலனான தஸவ்வூர் என்பவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
கடையிலிருந்து எதிர்பாராதவிதமாக விரைவாக வீடு திரும்பிய சிறுமி, தாயும் அவரது கள்ளக்காதலனும் ஆட்சேபகரமான நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மும்பையில் உள்ள தனது தந்தையிடம் கூறப்போவதாகச் சிறுமி தெரிவித்துள்ளார்.தங்களின் விபரீதத் தொடர்பு வெளியாகிவிடும் என்ற பயத்தில், அத்தாய் சிறுமியை மிரட்டியுள்ளார். அத்துடன் நிற்காமல், தனது கள்ளக்காதலனை உசுப்பேற்றி, “என்னிடம் நடந்துகொள்வது போலவே இவளிடமும் நடந்துகொள், அப்பொழுதுதான் இவள் வாயை மூடுவாள்” எனக் கூறிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யத் தூண்டியுள்ளார்.
கள்ளக்காதலன் சிறுமியைத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது, தாயும் அதற்கு முழுமையாக உடந்தையாக இருந்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு, தாய் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.நடந்த கொடுமைகளைக் பாதிக்கப்பட்ட சிறுமி மும்பையிலிருந்த தனது தந்தையிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். உடனடியாக கிராமத்திற்குத் திரும்பிய தந்தை, உள்ளூர் காவல் நிலையத்திலும் உயர் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தற்போது மிஷ்ரோலியா காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தஸவ்வூர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
