கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் போது எதிர்பாராத ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. திடீரெனப் பெய்த மழையால் ஆட்டம் தடைபட்டபோது, மைதானப் பணியாளர்கள் கவர்கள் மீது ஏறி ஆடிய உற்சாகமான நடனம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது போட்டி நடக்கும் போது திடீரெனப் பெய்த கனமழையால் ஆட்டம் தடைபட்டது. மைதானத்தை நனையாமல் பாதுகாப்பதற்காகப் பணியாளர்கள் உடனடியாகப் பிட்ச் கவர்களை இழுத்து மூடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
வழக்கமாக மழை பெய்தால் ரசிகர்கள் சோர்வடைவது வழக்கம், ஆனால் இந்த முறை மைதானத்தின் ஒலிக்கட்டமைப்பில் இருந்து ஒலித்த கரீபியன் இசையைக் கேட்டதும், பணியாளர்கள் தங்கள் சோர்வை மறந்து கவர்கள் மீதே உற்சாகமாக ஆடத் தொடங்கினர். அவர்களின் இந்தத் துள்ளலான நடனம் அங்கிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், மழை இடைவெளியை ஒரு கேளிக்கைத் திருவிழாவாக மாற்றியது.
Rain Break done RIGHT! 🌧️🕺
We do rain delays differently in the Caribbean! 🇱🇨 x 🇦🇬#CPL26 #SLKvABF #BiggestPartyInSport #CricketPlayedLouder #ElDorado pic.twitter.com/MdzNh3oQ1N
— CPL T20 (@CPL) August 15, 2026
மைதானப் பணியாளர்களின் இந்த நடனக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, அவை உடனடியாக வைரலாயின. கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை விட, இந்த கிரவுண்ட்மேன்களின் கரீபியன் ஸ்டைல் கொண்டாட்டம் தான் தற்போது இன்டர்நெட்டின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. சிபிஎல் தொடரின் உண்மையான திருவிழா மனநிலையை இந்தச் சம்பவம் பறைசாற்றுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி டிஎல்எஸ் முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மழையால் ஏற்பட்ட ஏமாற்றத்தை, மைதானப் பணியாளர்களின் இந்த நடனம் முழுமையாகப் போக்கி மறக்க முடியாத ஒரு இரவாக மாற்றியுள்ளது.
