தெலுங்கானா மாநிலம் பன்ஸ்வாடா பகுதியில் உள்ள அரசு குருகுலப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் சங்கீதா. குடியரசு தின விழாவையொட்டி, பள்ளியில் இருந்த நாற்காலிகளைத் தலைமையாசிரியரின் வீட்டிற்கு கொண்டு செல்ல பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஒரு ஆட்டோவில் நாற்காலிகளை ஏற்றி, அதனுடன் உதவி செய்ய மாணவி சங்கீதாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

ஆட்டோ பள்ளி வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சங்கீதா நிலைதடுமாறி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் காது கேட்காதவர் என்றும், அவர் மது அருந்தி இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிஞ்சு மாணவியை வீட்டு வேலைக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.