கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே உள்ள ஆலந்து பகுதியைச் சேர்ந்த முக்தாபாய் (38) என்ற பெண்ணுக்கு, பேய் பிடித்திருப்பதாக அவரது கணவர் வீட்டார் நம்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் முரூம் கிராமத்தில் வசித்து வந்த முக்தாபாய் திடீரென மயங்கி விழுந்தபோது, அவர் உடலில் ஆவி புகுந்துவிட்டதாகக் கூறி அவரது மைத்துனர் மற்றும் உறவினர்கள் வேப்பங்குச்சிகளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அத்தோடு நிறுத்தாமல், ‘பேயை ஓட்டுகிறோம்’ என்ற பெயரில் அவரை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்தும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலால் உடல்நிலை மிகவும் மோசமடைந்த முக்தாபாயை, அவரது தாய் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், பலத்த காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முரூம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “இன்றைய அறிவியல் யுகத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளால் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிபோயிருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
